யானை சவாரி
ராமதுரைக்கு ஏனோ அன்று பழைய நிகழ்ச்சிகளின் நினைவு அதிகமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக மனைவி சுமதியின் மறைவுக்குப் பின் தனிமை அவரை மிகவும் வாட்டியது. ஒரே பெண் மஞ்சு. அவள் தன்னுடன் வந்து தங்கி விடும்படி சொன்னாலும் அவருக்கு முடியவில்லை. இந்த வீட்டில் இருப்பதால் சுமதியுடன் வாழ்வது போன்ற எண்ணம் ஏற்படுவதாகத் தோன்றும். அவ்வப்போது சென்று சில நாள் தங்கி வருவார். அவரது பேத்தி அனுஷாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும். " பாட்டி ஏன் தாத்தா நம்மை விட்டு போயிட்டாங்க. எனக்கு அவங்களைப் பார்க்கணுமே" என்பாள் கண்கலங்க.
இரண்டு நாட்களாக வார இறுதி விடுமுறைக்கு வந்து விட்டுப் போன பெண், பேத்தியின் நினைவு மனதை வாட்டியது. சுமதியின் நினைவு வந்தால் அவள் புகைப்படத்தை பார்த்தபடி ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். அன்றும் அதுபோல் பார்த்தபோது, அவர் அனுஷாவை முதுகில் வைத்து யானை ஓட்டிய புகைப்படத்தைப் பார்த்தார். அன்றைய சம்பவம் மனதில் வந்தது.
"பாட்டி இங்க வந்து பார்"என்று கூப்பிட்ட பேத்தி அனுஷாவின் குரலுக்கு "இதோ வரேன்" என்றபடியே தன் கைவேலை யைப் பாதியில் நிறுத்தி விட்டு வந்தாள் சுமதி.
"எதற்கு கூப்பிட்டாய்?" என்றவளிடம்,
"பாரு நான்தான் இந்த நாட்டின் ராணி. நான் யானை மேல சவாரி போறேன்! இந்தத் தாத்தா யானை ரொம்ப மெதுவா போகுது. கொஞ்சம் வேகமா போகச் சொல்லு" என்றாள் பேத்தி அனுஷா.
"நீயே உன் தாத்தா யானையிடம் சொல்லேன்" என்ற சுமதியிடம்,"தாத்தா நான் சொன்னா கேட்க மாட்டேங்கறார்! நீ வந்து சொன்னாதான் வேகமா போவாராம்."
சுமதி தன் கணவரிடம்,"என்னங்க இதெல்லாம்" என்று சிரித்தபடி கேட்க, அனுஷா, "பாட்டி நீதான் இந்த வீட்டுக்கு ராணியாம்! அதனால் தாத்தா நீ சொல்வதை மட்டும்தான் கேப்பாராம்" என்றாள்.
"இதோ பார்! இப்போ யானை வேகமா போகும்" என்றபடியே, "தாத்தா யானையே, என் குட்டி ராணி கேட்டபடி வேகமா போ" என்று சொல்ல, தாத்தாவும்," என் இதய அரசியே! நீ சொன்னபடி வேகமா போறேன்"என்றார்!
சுமதியின் புகைப்படத்தை பார்த்தவர்,
" உனக்கு என்ன அவசரம்? இப்படி என்னைத் தனியா தவிக்க விட்டுப் போயிட்டயே" என்று கண்கலங்கினார்.
ராதா பாலு
Comments
Post a Comment